Wednesday, March 30, 2011

இந்தியா vs பாகிஸ்தான்

  

இன்று மொகாலியில் நடைபெறவிருக்கும் உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருகிறது. அரையிறுதி போட்டியை காண உலகெங்கிலும் உள்ள இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருகின்றனர். இதுவரை நடந்த 10 உலககோப்பை போட்டிகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் நான்கு முறை (1992, 1996, 1999, 2003) போட்டியிட்டுள்ளனர். போட்டியிட்ட நான்கு முறையும் இந்திய வென்று இருக்கிறது. ஐந்தாவது முறையும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் இன்று இந்திய களம் இறங்குகிறது. இதுவரை நடந்த போட்டிகளின் விவரங்கள் கீழே...

1992 - பென்சன் & ஹெட்ஜஸ் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்ஐ தேர்வுசெய்தது. அதில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. சச்சின் டெண்டுல்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

1996 - வில்ஸ் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்றது. பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்ஐ தேர்வுசெய்தது. அதில் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.. நவ்ஜோத் சிங் சித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

1999 - ஐ.சி.சி. உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. ஓல்ட் ட்ரபோர்ட்ல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது முறையாக தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்ஐ தேர்வுசெய்தது. அதில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வெங்கடேஷ் பிரசாத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2003 - ஐ.சி.சி. உலக கோப்பை போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது. செஞ்சுரியன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதன் முறையாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்ஐ தேர்வுசெய்தது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது முறையாக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மொகாலி கிரிக்கெட் மைதானத்தை பொறுத்த வரையில் இந்திய இதுவரை 9 போட்டிகள் விளையாடி 5 போட்டிகள் வென்று இருக்கிறது.பாகிஸ்தானுடன் இந்த மைதானத்தில் இரண்டுமுறை போட்டியிட்டு இரண்டுமுறையும் தோற்று இருக்கிறது.பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டமான இந்த மைதானம் இந்திய அணிக்கு இந்தமுறை அதிஷ்டத்தை தருமா என்று பொறுத்து இருந்துதான் பார்கவேண்டும்.


தற்போது இருக்கும் இந்திய அணியில், இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த நான்கு உலக கோப்பை போட்டிகளிலும் விளையாடிய ஒரே வீரர் நமது லிட்டில் மாஸ்டர் சச்சின் மட்டுமே. அவரின் அனுபவம் நிச்சயம் இந்த போட்டிக்கு துணை நிற்கும். பேட்டிங்ஐ பொறுத்தவரையில் நம் அணி மிகவும் சிறப்பாக இருக்கிறது ஆனால் பந்துவீச்சு கொஞ்சம் கவலையை அளிக்கிறது. இருப்பினும் நாம் நூறு சதவிகித அர்பணிப்போடு விளையாடினால் நிச்சயமாக வெற்றிபெறமுடியும்.

All the best to Team India.



Thursday, March 24, 2011

மன்மோகன் சிங்



"எனக்கு இதைபற்றி ஒன்றும் தெரியாது"
"என்னுடைய கவனத்திற்கு வரவில்லை"
"எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை"

இப்படி சமீபகாலமாக, ஊடகங்கள் வாயிலாக நமது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பேட்டிகளிலும், உரைகளிலும் பயன்படுத்திய வாசகங்கள்தான் இவை.

மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார மேதை, நற்பண்பாளர், நேர்மையானவர், இதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரு தனி மனிதராக எந்தவிதத்திலும் களங்கம் இல்லாதவர் என்றாலும்கூட அவர் இரண்டாவது முறை தலைமையேற்று நடந்துகொண்டிருக்கும் காங்கிரஸ் ஆட்சியில், சந்தித்துவரும் ஊழல்களை பற்றி எழும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அவர் பிரயோகிக்கும் வாசகங்களை பார்க்கும்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை தலைமையேற்று வழி நடத்தகூடிய மாண்பு இருக்கிறதா என்ற எண்ணம் எழுகிறது.

எதற்கும் பொறுப்பேற்று கொள்ளவோ அல்லது தனிச்சையாக எந்த முடிவும் எடுக்கமுடியாத நிலையில் ஏன் அவர் பிரதமர் பதவியில் தொடர வேண்டும் என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனத்திலும் எழுவது இயல்பே. இதுவரை இவர் தலைமையிலான அரசாங்கம் சந்தித்துவரும் ஊழல் மற்றும் முறைகேடுகளை பட்டியலிட்டால் தலைசுத்தி மயக்கம் வரும்போல் இருக்கிறது.


1. 2G ஸ்பெக்ட்ராம்
2. வோட்டுக்காக பணம்.
3. ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு.
4. காமன்வெல்த் கேம்ஸ் முறைகேடு.
5. இஸ்ரோ S-பேண்ட் முறைகேடு.
6 . விஜிலன்ஸ் கமிஷனர் S .J .தாமஸ் நியமனம்.

.....இப்படி போய்கொண்டே இருக்கிறது.

மன்மோகன் சிங் இதுவரை அனைத்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட சோனியாவின் கைப்பாவையாகதான் இருந்து வருகிறார். ஆனால் நாம் மன்மோகன் சிங்கை குறைகூறி எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் மன்மோகன் சிங் அரசியலில் நுழைந்ததே அவர் எதிர்பாரத ஒன்று. 1991ல் நரசிம்மராவ்   வற்புறுத்திய காரணத்தால் அவர் இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அதுவே அவர் அரசியல் வாழ்க்கை தொடங்க காரணமாக இருந்தது. 2004ல் நடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றவுடன் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பதால் அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துவதில் ஏற்பட்ட சர்ச்சையில் சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கினார். இதுவும் அவர் எதிர்பாராமல் நடந்த இரண்டாவது ஒன்று.

இன்றைய அரசியல் சுழலில் அவர்மட்டும் தூய்மையானவராக இருந்தால் போதாது அவர் வழிநடத்தி செல்கின்ற அவரின் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் மற்ற அமைச்சர்களின் செயல்பாடுகளை பற்றியும் அவர் கண்காணித்து இருந்து இருக்கவேண்டும். அதை செய்ய தவறியதின் காரணமாக தான் இன்று பல அவபெயர்களை சந்திதுகொண்டு இருக்கிறார்.

நம்முடைய அண்டை நாடான சீனா இன்று அசுர வளர்ச்சி பெற்று ஆசியாவில் ஒரு வல்லரசு நாடாக மாறியிருக்கிறது. வல்லரசு நாடக எப்போதோ ஆகி இருக்கவேண்டிய நம் நாடு, முக்கியமாக ஊழலாலும், தனிமனித ஒழுக்கம் இல்லாத நேர்மையற்ற அரசியல்வாதிகளால் இன்னும் உருப்படாமல் இருந்துவருகிறது. பாவம் அது நம் நாட்டு மக்களின் சாபக்கேடு.

இன்றைய தேவை வேகமும், விவேகமும், அதிரடியாக முடிவுகளை எடுக்ககூடிய கறைபடியாத அரசியல் தலைவர் ஒருவர் (கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்). அப்படி ஒருவர் இந்த நாட்டிற்கு கிடைத்தால் ஓரளவு முன்னேறலாம். அதுவரை இந்தியாவை அந்த கடவுள்தான் காப்பாத்தனும்.

Tuesday, March 22, 2011

பொய்மான் கரடு



இதுவரை நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவல். பொன்னியின் செல்வன் நாவல் படித்ததிலிருந்தே எல்லோரையும் போலவே எனக்கும் கல்கி அவர்களின் மற்ற படைப்புகளையும் படிக்க வேண்டும் எ‌ன்ற ஆர்வம் இருந்துவந்தது. கடந்தவாரம்தான் அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. கல்கி எழுதிய "பொய்மான் கரடு" என்னும் நாவலை  இன்றைக்குதான் chennailibrary எ‌ன்ற இணையதளத்தில் ஆன்லைனிலேயே படித்துமுடித்தேன்.


சேலத்திலிருந்து நாமக்கல் போகும் வழியில் பொய்மான் கரடு எ‌ன்ற ஒன்றை கல்கிக்கு காட்டுகிறார் கார் ஒட்டுனர். பொய்மான் கரடு என்பது ஒரு பாறை. அந்த பாறையை தொலைவில் இருந்து பார்க்கும்போது மான் ஒ‌ன்று பாறையின் முன் நிற்பதுபோல் தோற்றம் அளிக்கிறது ஆனா‌‌‌ல் அருகில் சென்றால் அப்படி ஒன்று இருப்பதாக தோன்றவில்லை. இந்த விசித்திரமான பொய்மான் கரடு பற்றி ஏதாவது தெரியுமா எ‌ன்று ஒட்டுனரிடம்  கேட்க,  தனக்கு தெரிந்த கதையை ஒட்டுனர் கல்கிடம் கூறுவதாக புத்தகம் அமைந்திருகிறது.

செங்கோடன் கதையின் நாயகன், விவசாயி, கஞ்சன். செம்பவளவல்லி கதாநாயகி, செங்கோடன்மீது அதிக அன்பு கொண்டவள். இவர்களுக்கு இடையில் குமாரி பங்கஜா என்பவள் குறுக்கிடுகிறாள்.  குமாரி பங்கஜா மற்றும் அவளின் கூட்டாளிகளின் சதிவலையில் செங்கோடன் சிக்கி கொலைபழி சுமக்க நேரிடுகிறது. அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான்? குமாரி பங்கஜாவின் கூட்டாளிகள் யார்? அவர்களின் திட்டம் என்ன?  செங்கோடன் சேமித்து வைத்த புதையல் என்ன ஆனது? இந்த கேள்விகளுக்கெல்லாம் உரிய விடையை, தனக்குரிய நடையில் அழகாக எழுதியிருக்கிறார்.  

பொய்மான் கரடு - கல்கியின் படைப்பில் நான் படித்த பிடித்த இரண்டாவது சுவையான நாவல். Don't Miss it. Worth Reading.
 

Monday, March 21, 2011

ஜெண்டில்மேன்


கன்னியமான ‌விளையா‌ட்டு வீரர் என மறுபடியும் நிருபித்திருக்கிறார் நம் இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர். நேற்று சென்னையில் நடந்த இந்தியா மற்றும் மேற்கு இந்திய அணிகளுக்கான உலக கோப்பை கிரிகெட் லீக் போட்டியில் ரவி ராம்பால் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார் சச்சின். ஆஸ்திரேலிய நடுவரான ஸ்டீவ் டெவிஸ் அவுட் கொடுக்கவில்லை. ஆயினும், தாம் அவுட் என்பதை உணர்ந்த சச்சின் நடுவரின் தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் பெவிலியனை நோக்கி நடந்தார். இ‌து குறித்து கரு‌த்து தெரிவித்துள்ள மேற்கு இந்திய அணி கேப்டன் டெர்ரென் சம்மி, சச்சின் நேர்மையை பாராட்டி அவரை ஒரு உண்மையான "ஜெண்டில்மேன்" எ‌ன கூறியுள்ளார்.

இப்படி இருக்க, நேற்று முந்தய நாள், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கான உலக கோப்பை கிரிகெட் லீக் போட்டி கொழும்புவில் நடந்தது. முகமது ஹபீஸ் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் அக்மாலிடம் கேட்ச் கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் தான் அவுட் எ‌ன உணர்ந்தும், அம்பயரின் முடிவுக்காக காத்திருந்தார். டிவி அம்பயர் அவுட் எ‌ன அறிவித்த பிறகுதான் பெவிலியனை நோக்கி நடந்தார். பின்னர் பேட்டி அளித்த பான்டிங், "தான் அவுட் எ‌ன தெரியும் இருந்தும் அம்பயரின் முடிவுக்காக காத்திருந்ததாக சொன்னர்". இவர் எவ்வளவு மோசமான விளையாட்டு ஸ்பிரிட் கொண்டவர் எண்பதை உணரமுடிகிறது. பான்டிங் இ‌து போல நடந்து கொள்வது புதிது அல்ல. நேர்மையற்ற தண்மை, விளையா‌ட்டு வீரர்களிடம் வாக்குவாததில் ஈடுபடுவது, அம்பயர்கலை மிரட்டுவது இதெல்லாம் கைவந்தகலை. ஒட்டுமொத்ததில் பிஹேவியர் என்பது சுத்தமாக என்னவென்றே தெரியாத காட்டுமிராண்டி இவர். இவரெல்லாம், கிரிக்கெடடில் இருந்து ரிடெயர் ஆண பிறகு த‌ன் கிரிக்கெட் வாழ்கையை திரும்பி பார்த்தால் சொல்லிக் கொள்கிறமாதிரி உருப்படியாக ஒன்றும் இருக்காது, இவர் செ‌ய்த அட்டூழியங்கல் தான் நினைவில் நிற்க்கும்.

Thursday, March 17, 2011

மரணம் பற்றி ...

மரணத்தைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகள் எனக்கு ‌மிகவு‌ம் பிடித்தவை. உங்களுக்கும் பிடிக்கும் எ‌ன்று நினைக்கிறேன்...


"செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும். செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை. நான் நானாகவே தொடர வேண்டும். அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும். கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும். அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன, முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்"

Monday, March 14, 2011

அலட்சியவாதிகள்...



சமீபத்தில் மிகவும் எரிச்சலை உண்டாகிய விஷயம், என் குழந்தைக்காக விண்ணப்பித்து எடுத்த புதிய பாஸ்போர்ட். ஏன்டா! விண்ணப்பித்தோம் என்று ஆகிவிட்டது. அவ்வளவு டென்ஷன். தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பித்து, ஒரே வாரத்தில் கிடைக்கவேண்டிய பாஸ்போர்ட் ஒன்றரை மாதம் கழித்துதான் கையில் கிடைத்தது.

விண்ணப்பம் செய்து, சரியாக மூன்று வாரம் கழித்து, அணைத்து ஆவணங்களுடன் சரிபார்க்க வருமாறு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து கடிதம்வந்தது. ஒரு வாரத்தில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது! அதுவும் மூன்று வாரம் முடிந்த நிலையில் இப்படி ஒரு கடிதம்... சரி! என்று அவசர அவசரமாக அனைத்து ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அலுவலகம் சென்றிருந்தோம். அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்த பின் இன்னும் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும் என்று அதிகாரி சொன்னார் (அப்போதே ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில்...)

ஒருவாரமும் முடிந்தது. பாஸ்போர்ட் வந்தபாடில்லை. இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில், வீட்டிற்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் சுமார் நான்கு முறை அலைந்திருப்போம் (இதற்காக கால் டாக்சிக்கு செலவு செய்தது 1000 ருபாய்). ஒவ்வொரு முறையும் காலதாமதத்திற்கு ஒவ்வொரு காரணத்தை சொல்லி அனுப்பினார்கள் அதிகாரிகள். இறுதி முயற்சியாக "க்ரிவேன்செஸ் செல்லு"க்கு ஒரு இ-மெயில் (grv.jscpv@mea.gov.in; pptgrievance@tn.nic.in) அனுப்பினோம். பதில் கிடைக்காது என்ற நம்பிக்கையோடு அனுப்பியதற்கு பதில் கிடைத்தது. அதில் பாஸ்போர்ட் உயரதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.

அவர் உறுதி அளித்த ஒருவாரம் கழித்து பாஸ்போர்ட் கையில் கிடைத்தது. அந்த பாஸ்போர்டில் வழங்கிய நாள் (Date of Issue) விண்ணப்பித்த ஒரு வாரத்தில் கிடைத்ததாக முன்தேதியிட்டு இருந்தது. எங்களுக்கு கொஞ்சம் முரண்பாடாக தோன்றியது. விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் ஏன் ஒன்றரை மதம் கழித்து கையில் கிடைத்தது. எங்கே தவறு என்று புரிந்து கொள்ளமுடியவில்லை என்றாலும் அதிகாரிகளின் அலட்சியம் இதில் இருப்பது கட்டாயம் தெளிவாக புரிகிறது.

சாதாரண முரையில் வழங்கப்படும் பாஸ்போர்ட்க்கு 1000 ருபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனா‌‌‌ல் தட்கல் என்னும் துரித முறையில் வழங்கப்படும் பாஸ்போர்ட்காக 1000 ருபாயும் சேர்த்து கூடுதலாக 1500 ருபாய் (1 முதல் 7 நாட்களுள் பெற) அல்லது 1000 ருபாய் (8 முதல் 14 நாட்களுள் பெற) வசூலிக்கப்படுகிறது. இப்படி வசூலிக்கப்பட்டும், உரிய நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்காதால் மக்களுக்கு பணவிரயமும், காலவிரயமும் ஏற்பட்டு, அரசு அமைப்புகளின் மீதும், அதிகாரிகளின் மீதும், கடும் அதிருப்தி ஏற்ப்படுகிறது. ஆனா‌‌‌ல் அதை பற்றியெல்லாம் அதிகாரிகளுக்கு கவலையே இல்லை. அர‌சிய‌ல்வாதிகளையாவது 5 வருடத்திற்கு ஒரு முறையாவது தண்டிக்கமுடியும், ஆனா‌‌‌ல் இந்த மா‌தி‌ரி பொறுப்பற்ற, அலட்சிய அதிகாரிகளை ஒண்ணும் செய்யமுடியாது. அந்த கடவுளே நிணைத்தாலும் இந்த நாட்டு மக்களை இவர்களிடம் இருந்து காப்பாற்றமுடியாது என்பதில் எள்ளளவும் சந்தேகமும் இல்லை.

Sunday, March 13, 2011

சச்சின் 100/100



இந்தியா கிரிக்கெட் வரலாற்றில், ஏன்! உலக கிரிக்கெட் வரலாற்றில் இவரை போல இன்னொருவர் கிடைப்பாரா (பிறப்பாரா?) என்பது சந்தேகமே...

தனது 16 வயதிலிருந்து (அதாவது 1989 ஆண்டு முதல் இன்றுவரை), சுமார் 22 ஆண்டுகாலம் இந்தியா கிரிக்கெட் அணிக்காக விளையாடிக்கொண்டு இருகிறார். இவர் உலகில் ‌விளையாடாத கிரிக்கெட் மைதானம் இல்லை, சந்திக்காத சிறந்த பந்து வீச்சாளர்களும் இல்லை, இவர் தினரடிக்காத எதிர் அணியும் இல்லை. பல சாதனைகளுக்கு சொந்த்காரறான இவர், வெகு விரைவில் அடையப்போகும் மற்றொரு சாதனை சதத்தில் சத‌ம்.

ஆ‌ம்! இதுவரை, டெஸ்ட் போட்டிகளில் 51 சதமும், ஒரு நாள் போட்டிகளில் 48 சதமும் எடுத்துள்ள இவர் எஞ்சியிருக்கும் ஒரு சதத்தையும் எடுத்தால் 100 சத‌ம் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அடைவார். இந்த சாதனையை, நடந்து கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியிலேயே எடுப்பார் எ‌ன ரசிகர் கூட்டம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

சச்சின் அடையபோகும் இந்த சாதனை, நிச்சயம் அவர் மகுடதில் இன்னொரு மாணிக்கமாக திகழும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

சச்சின் அவர்களுக்கு ஒவ்வொரு இந்திய குடிமக்களின் சார்பாக இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !!!

Saturday, March 12, 2011

சுனாமி...



நேற்று காலை இந்தியா நேரப்படி சரியாக 11 மணியளவில் ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சச சுனாமி அலைகள் ஜப்பானின் வடகிழக்கு பகுதியை தாக்கியது. இதனால் பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு, மக்கள் மீளமுடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. முன்னுறு பேர்களின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், பசிபிக் பகுதிகளில் இருக்கும் மற்ற நாடுகளும் இன்னும் 24 மணிநேரத்திற்குள் சுனாமியால் தாக்ககுடும் என்பதால் அந்நாடுகளுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சுனாமி அலைகள் சுமார் 500 கி.மி. வேகத்தில், 20 முதல் 30 அடி வரை உயர்ந்து தாக்ககூடும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்திய, இலங்கை ஆகிய நாடுகளுக்கு, அபாயம் இல்லை.

இயற்கையின் இந்த மாபெரும் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளயிருக்கும், ஜப்பான் மற்றும் அந்நாட்டு குடிமக்களுக்க்காகவும் எல்லாம்வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.

Wednesday, March 09, 2011

மகளீர் தின வாழ்த்துகள் !



நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை சுவையாகவும், மகிழ்ச்சியாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்பவர்கள் பெண்கள். தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக பல்வேறு பரிமானங்களில் நம் அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக விளங்குபவர்கள்.பல்வேறு காலங்களில் பலதரப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து, போராடி, இன்று வெற்றிநடை போட்டுக்கொண்டு இருகிறார்கள். இன்று (மார்ச் 8) சர்வதேச மகளீர் தினம் கொண்டாடும் இவ்வேளையில், மகளீர் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்துக்கள்!