Thursday, May 03, 2012

ஒரு நடுப்பகல் மரணம் !!!


இன்று மே 3ம் தேதியோடு வாத்தியார் சுஜாதா அவர்கள் நம் அனைவரையும் விட்டுச்சென்று 4 வருடங்கள் நிறைவடைகிறது. அன்றைய தினம்தான் சேத்தன் பகத் அவர்கள் எழுதிய "2 ஸ்டேட்ஸ்" என்ற புத்தகத்தை வெகு மாதங்களாக முயற்சி செய்து படித்து முடித்து இருந்தேன். 2OO பக்கங்கள் கொண்ட புத்தகம்தான் என்றாலும் இதுவரை நான் இவ்வளவு நேரம் எடுத்து கொண்டதில்லை. வாத்தியார் அவர்களின் புத்தகங்கள் மீது எவ்வளவு விருப்பமோ அதேபோல் எனக்கு சேத்தன் பகத் அவர்களின் புத்தகங்கள் மீது அவ்வளவு விருப்பம். ஏற்கனவே சேத்தன் பகத் எழுதிருந்த "ஒன் நைட் அட் கால் சென்ட்டர்" என்ற புத்தகத்தை படித்திருந்தேன், அதைவிட "2 ஸ்டேட்ஸ்" எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

படித்து முடித்துவிட்டு வேறு ஒரு புத்தகம் படிக்கலாம் என்று என் புத்தக அலமாரியை ஆராய்ந்தபோது கடந்த விடுமுறையில் சென்னை அண்ணா நகரில் உள்ள "கனக்ஷன்"ல் வாங்கிய வாத்தியார் அவர்கள் எழுதிய "ஒரு நடுப்பகல் மரணம்" கண்ணில் தென்பட்டது. உடனே எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். வாத்தியார் அவர்கள் குங்குமம் இதழில் தொடராக எழுதியது. நிச்சயமாக 1980 களில் எழுதியதாக இருக்கலாம், ஏனெனில் கதையில் "தந்தி" மற்றும் "கடிதங்கள்" ஆகியவை பற்றி வாத்தியார் குறிபிட்டுள்ளதால் (அதற்காக இப்போது யாரும் பயன்படுத்த வில்லை என்று அர்த்தம் இல்லை) அது செல் போன்கள் காலங்களுக்கு முன்னதாக இருக்கலாம். 280 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை அக்டோபர் 2010 முதல் பதிப்பாக "கிழக்கு பதிப்பகம்" வெளியிட்டுள்ளது.

ட்விஸ்ட்கள் நிறைந்த வாத்தியாரின் அக்மார்க் மர்ம கதை. தேனிலவுக்காக பெங்களூர் செல்லும் புதுமண ஜோடிகள் உமா மற்றும் கிருஷ்ணமூர்த்தியும் ஹோட்டல் ஒன்றில் தங்குகின்றனர். ஹோட்டல் அறையில் மர்ம நபர்களால் கொடூரமுறையில் கிருஷ்ணமூர்த்தி கொல்லப்படுகிறான். அக்கொலையின் பின்னணயில் யார் யார் இருக்கிறாகள் என்ற போலீஸ் விசாரணையில் மணி, ராகேஷ், திவ்யா, ராமகிருஷ்ணன் ஆகிய நால்வர் விசாரணை வளையத்தில் வருகின்றனர். இவரில் யார் கொலையாளி என்பதை இறுதியாக கண்டு பிடிக்கின்றனர். கதை இவ்வளவுதான். ஒரே பத்தியில் சொல்லிவிடலாம்.

ஆனால் அதைவிட சுவையான விஷயம் சுஜாதா அவர்கள் அவர் பாணியில் ஒவ்வொரு நிகழ்வையும் விவரிப்பது அபாரம். உண்மையிலேயே ஒரு ஜீனியஸ், "Master of All Subjects" என்று சொன்னால் மிகையில்லை. மருத்துவம், தடயவியல், விஞ்சானம், இவற்றை பற்றி அவர் கதையின் உடே விவரிப்பது அவருடைய தனி ஸ்பெஷாலிட்டி. அவர் இன்று இல்லை என்றாலும் அவர் விட்டு சென்ற ஒவ்வொரு படைப்புகளிலும் அவர் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். WE MISS YOU DEAR SUJATHA SIR ....

Picture Courtesy: http://www.desikan.com/