Thursday, March 24, 2011

மன்மோகன் சிங்



"எனக்கு இதைபற்றி ஒன்றும் தெரியாது"
"என்னுடைய கவனத்திற்கு வரவில்லை"
"எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை"

இப்படி சமீபகாலமாக, ஊடகங்கள் வாயிலாக நமது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பேட்டிகளிலும், உரைகளிலும் பயன்படுத்திய வாசகங்கள்தான் இவை.

மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார மேதை, நற்பண்பாளர், நேர்மையானவர், இதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரு தனி மனிதராக எந்தவிதத்திலும் களங்கம் இல்லாதவர் என்றாலும்கூட அவர் இரண்டாவது முறை தலைமையேற்று நடந்துகொண்டிருக்கும் காங்கிரஸ் ஆட்சியில், சந்தித்துவரும் ஊழல்களை பற்றி எழும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அவர் பிரயோகிக்கும் வாசகங்களை பார்க்கும்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை தலைமையேற்று வழி நடத்தகூடிய மாண்பு இருக்கிறதா என்ற எண்ணம் எழுகிறது.

எதற்கும் பொறுப்பேற்று கொள்ளவோ அல்லது தனிச்சையாக எந்த முடிவும் எடுக்கமுடியாத நிலையில் ஏன் அவர் பிரதமர் பதவியில் தொடர வேண்டும் என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனத்திலும் எழுவது இயல்பே. இதுவரை இவர் தலைமையிலான அரசாங்கம் சந்தித்துவரும் ஊழல் மற்றும் முறைகேடுகளை பட்டியலிட்டால் தலைசுத்தி மயக்கம் வரும்போல் இருக்கிறது.


1. 2G ஸ்பெக்ட்ராம்
2. வோட்டுக்காக பணம்.
3. ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு.
4. காமன்வெல்த் கேம்ஸ் முறைகேடு.
5. இஸ்ரோ S-பேண்ட் முறைகேடு.
6 . விஜிலன்ஸ் கமிஷனர் S .J .தாமஸ் நியமனம்.

.....இப்படி போய்கொண்டே இருக்கிறது.

மன்மோகன் சிங் இதுவரை அனைத்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட சோனியாவின் கைப்பாவையாகதான் இருந்து வருகிறார். ஆனால் நாம் மன்மோகன் சிங்கை குறைகூறி எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் மன்மோகன் சிங் அரசியலில் நுழைந்ததே அவர் எதிர்பாரத ஒன்று. 1991ல் நரசிம்மராவ்   வற்புறுத்திய காரணத்தால் அவர் இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அதுவே அவர் அரசியல் வாழ்க்கை தொடங்க காரணமாக இருந்தது. 2004ல் நடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றவுடன் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பதால் அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துவதில் ஏற்பட்ட சர்ச்சையில் சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கினார். இதுவும் அவர் எதிர்பாராமல் நடந்த இரண்டாவது ஒன்று.

இன்றைய அரசியல் சுழலில் அவர்மட்டும் தூய்மையானவராக இருந்தால் போதாது அவர் வழிநடத்தி செல்கின்ற அவரின் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் மற்ற அமைச்சர்களின் செயல்பாடுகளை பற்றியும் அவர் கண்காணித்து இருந்து இருக்கவேண்டும். அதை செய்ய தவறியதின் காரணமாக தான் இன்று பல அவபெயர்களை சந்திதுகொண்டு இருக்கிறார்.

நம்முடைய அண்டை நாடான சீனா இன்று அசுர வளர்ச்சி பெற்று ஆசியாவில் ஒரு வல்லரசு நாடாக மாறியிருக்கிறது. வல்லரசு நாடக எப்போதோ ஆகி இருக்கவேண்டிய நம் நாடு, முக்கியமாக ஊழலாலும், தனிமனித ஒழுக்கம் இல்லாத நேர்மையற்ற அரசியல்வாதிகளால் இன்னும் உருப்படாமல் இருந்துவருகிறது. பாவம் அது நம் நாட்டு மக்களின் சாபக்கேடு.

இன்றைய தேவை வேகமும், விவேகமும், அதிரடியாக முடிவுகளை எடுக்ககூடிய கறைபடியாத அரசியல் தலைவர் ஒருவர் (கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்). அப்படி ஒருவர் இந்த நாட்டிற்கு கிடைத்தால் ஓரளவு முன்னேறலாம். அதுவரை இந்தியாவை அந்த கடவுள்தான் காப்பாத்தனும்.

No comments: